பணம் இல்லா உலகைத் தேடி ஒரு பயணம்
ஓர் அறிமுகம்
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸின் தத்துவத்தின் மூலம் இந்த புத்தகத்தின் அறிமுகத்தை தொடங்குகிறேன்,
“நீங்கள் ஏழையாக பிறந்தால் அது உங்களுடைய தவறு இல்லை, ஆனால், ஏழையாகவே இறந்தால் அது உங்கள் தவறு தான்”
“உன் கையில் பணம் இருந்தால் நீ யார் என்பதை நீயே மறந்துவிடுவாய், உன் கையில் பணம் இல்லையென்றால் நீ யார் என்பதை இந்த உலகமே மறந்துவிடும்”
இப்படி ஏழையாய் வாழ்வதை ஒரு தவறாகவும், பணக்காரராய் வாழ்வதே பெருமை என்றும் பில் கேட்ஸ் மட்டும் இல்லை நம்மில் பலரும் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். இவரைப் போல் பல மேதைகளும், தொழில் வல்லுனர்களும், ஊக்கமூட்டும் பேச்சளர்களும், நமக்கு அடிக்கடி வழங்கும் புத்திமதிகள்
“சிறந்த தொழில் அதிபர் ஆவது எப்படி, எது சிறந்த முதலீடு, நிறைய பணம் சம்பாதிப்பது எப்படி, சீக்கிரம் பணக்காரர்களாக ஆவது எப்படி, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டுவது எப்படி.” என்று பல அறிவுரைகளை கூறிக்கொண்டே இருக்கிறார்கள். எதற்காக இவர்கள் இது போன்ற அறிவுரைகளை கூற வேண்டும்?
ஏனென்றால், பணம் தான் நமது அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்கிறது என்று நாம் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். அது முற்றிலும் உண்மை தான் ஆனால் அதையும் தாண்டி நாம் பணத்தால் நிறைய இழந்திருக்கின்றோம். நிறைய இழந்திருக்கிறோம், என்றால், எதற்காக இந்த பணத்திற்கு பின்னால் நாம் ஓடிக்கொண்டே இருக்கின்றோம்?
யாருக்காக இப்படி ஓடிக்கொண்டே இருக்கின்றோம்? இந்த ஓட்டம் எப்பொழுது நிற்கும்? என்ற கேள்வி என் மனதில் மட்டும் இல்லை உங்கள் மனதிலும் எழுந்திருக்கும். ஆனால், இந்த கேள்விக்கு பதில் யோசிக்க கூட நேரம் இல்லாமல் மறுபடியும் பணம் சம்பாதிக்க ஓடிக்கொண்டே இருக்கின்றோம். உங்கள் மனதில் எழுந்த இந்த கேள்விக்கு பதில் தான் இந்த
“பணம் இல்லா உலகை தேடி ஒரு பயணம் - பணம் பத்தும் செய்யும்”.
ஆம்! பணம் நமக்கு செய்த, செய்துகொண்டு இருக்கின்ற பத்து விஷயத்தையும். பணத்தால் நாம் இழந்தது என்ன என்பதையும், பணம் இல்லா உலகில் நம் வாழ்கை எப்படி இருக்கும் என்ற என் சிந்தனையையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.